இசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை.
[தொகு] இசை முறைகள்
உலகில் பல்வேறு இசை முறைகள் வழங்கி வருகின்றன. அவையாவன:
- இந்திய இசை
- ஐரோப்பிய இசை
- பர்சீய இசை
- கிரேக்க இசை
- எகிப்திய இசை
- சீன இசை
இந்த ஒவ்வொன்றும் பல்வேறு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளன. இவற்றுள் சிறப்பான சில அம்சங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
[தொகு] இந்திய இசை
இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நூற்றுக்கணக்கான இனங்கள்/இனக்குழுக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும் தன்னகத்தே அடக்கியது. இதனால் இப் பண்பாடுகளின் வெளிப்பாடுகளாகவுள்ள இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் பல்வேறு விதமான வேறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரந்துள்ளன. இவற்றுள் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் இசைவடிவங்களுட் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை. நூற்றாண்டுகளினூடாக சீர்செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை. உலகம் முழுவதிலும் அறியப்பட்டவை. இவற்றைவிட ஏராளமான கிராமிய, உள்ளூர் இசைமரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருவனவாக உள்ளன.
பின்வருவன இந்தியாவின் முக்கிய இசை மரபுகளுட் சிலவாகும்.
- கர்நாடக இசை
- இந்துஸ்தானி இசை
- ஹஸல்
- கவ்வாலி
- கிராமிய இசை
[தொகு] இந்திய இசையின் தனித்தன்மைகள்
- இந்திய இசை தனி இசை (melody)யை ஆதாரமாகக் கொண்டது. மேற்கத்திய இசை கோர்வை இசை (harmony)யை ஆதாரமாகக் கொண்டது.
- இந்திய இசையின் இராக அமைப்பு, பகைச்சுரங்களைக் கொண்ட மேளங்கள் 40ம், பகைச்சுரங்கள் இல்லாத மேளங்கள் 32ம் இன்று கருநாடக இசையில் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவை தேவாரப் பண்கள் ஆகும். இந்திய இசை வரலாற்றிலேயே இராக தாளத்துடன் நமக்குக் கிடைக்கப்பட்ட மிகப் பழமையான இசை வடிவம் தேவாரம் ஆகும். எண்ணற்ற இராகங்களுக்குத் தேவாரப் பண்களே ஆதாரமாயிருந்தன. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே வகையான இசைதான் இருந்தது. அக்காலத்தில் இந்துஸ்தானி, கர்நாடகம் என்று பிரிவு ஏற்படவில்லை. எனவே இந்திய இசைக்கே ஓர் அடிப்படியாக இருப்பது பண்கள் என்று கூறலாம்.
இசை வடிவங்கள் (தமிழ்) | தொகு |
---|---|
தமிழிசை | கருநாடக இசை | கிராமிய இசை | மெல்லிசை | திரையிசை | ராப் இசை (சொல்லிசை) | பாப் இசை | துள்ளிசை | ராக் இசை |