கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொல்லாடலிலும் இப்பொருளே வழங்குவதைக் காணலாம். எனினும் உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும் என்னும் தமிழ் அறிஞர் மு. வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.
இந்த சொல்லாடல் குழப்பத்தை தவிர்க்கக் கலை என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் கவின் கலைகள் (asthetic arts) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் தொழில்நுட்பக் கலைகள் என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம். கவின்கலைகளை அரங்காடல் கலை, எழுத்துக்கலை, கட்புலக் கலை என்று மேலும் பிரிக்கலாம்.
- அரங்காடல் கலைகள் (நிகழ் கலைகள்): நடனம், இசை, நாடகம், சொற்பொழிவு, தற்காப்பு கலை
- எழுத்துக் கலைகள்: கதை, கவிதை, கட்டுரை, நாடகம்
- கட்புலக் கலைகள்: ஓவியம், சிற்பம், ஒளிப்படம்
எக்கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் (கலை பற்றிய அறிவு, அழகியல் பார்வை), செய்திறன், சமூகப் பயன்பாடு என்பன இருக்கும். எனினும் இது கலை, இது கலை அல்ல என்று எச் செயற்பாட்டையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மேலும் கலை சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. அதாவது, பொருள் படைத்தவர்கள் கலை, பொதுமக்கள் கலை, அல்லது இன அடிப்படையிலான கலை என பல சமூகத் தாக்கங்களும் கலைக்கு உண்டு. எனவே கலை பல நிலைகளிலும், பல்வேறு தளங்களில் ஆயப்படவேண்டிய ஒன்று.
பொருளடக்கம் |
[தொகு] கலைகளை வகைப்படுத்தல்
பன்முகத் தன்மை கலைகளுக்கு உண்டு என்றபடியால் கலைகளை வகைப்படுத்துவது கடினம். கா. சிவத்தம்பி கலைகளை வகைப்படுத்துவது நோக்கி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: கலைகளை வகைப்படுத்துவதில் பயில்நெறிகளுக்கேற்ப வேறுபாடுகள் உள்ளன. புலப்பயன்பாடு கொண்டு, கட்புலக் கலைகள், வாய் மொழிக்கலைகள் எனவும், வழங்கப் பெறும் முறைமை கொண்டு அவைக்காற்றுகலைகள், அல்லாதவை எனவும், ஆக்கப்படும் முறைமை கொண்டு, வாய்மொழி எழுத்துக்கலைகள், குழைபொருட்கலைகள் எனவும் வகுக்கப்படும் மரபும் உண்டு. என்கி்றார்.
எளிமையாகக் கற்கக்கூடிய கலைகளைப் பொதுமக்கள் கலைகள் என்றும், நீண்ட பயிற்சி அல்லது பொருள் செலவு செய்து கற்கவேண்டிய கலைகளை நுண்கலைகள் என்றும் கூறலாம். மேலும், கலைவெளிப்பாடுகள் இனம் சார்ந்ததாக இருக்கும் பொழுது தமிழர் வழி கலைகள், பிற இனப் பிரதேச வழி கலைகள் என்றும் பிரிக்கலாம். மேலும், கலைகளின் தன்மைகளை பொறுத்து நிகழ் கலைகள், கட்புலக் கலைகள், தொழில்சார் கலைகள் என்றும் வகைப்படுத்தலாம்.
இவை தவிர மெய்யியல் கலைகள் என்னும் பிரிவும் உண்டு. அவையாவன: சூரிய கலை, சந்திரகலை (இடகலை), அக்கினி கலை. இவைகளை "சரவியல்" வரையறுக்கின்றது.