தன்யூப் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தன்யூப் ஆறு ஐரோப்பிய யூனியனில் மிக நீளமானதும், ஐரோப்பாவில் இரண்டாவது நீளம் கூடியதுமான ஆறு ஆகும். இது ஜெர்மனியில் உள்ள கருப்புக் காட்டில் இருந்து, பிரிகாக் (Brigach), பிரெக் (Breg) என்னும் இரண்டு சிறு ஆறுகளாகத் தோற்றம் பெறுகின்றது. இவை இரண்டும் இணையும் இடத்திலிருந்தே தன்யூப் ஆறு எனப் பெயர் பெறுகின்றது. இந்த ஆறு, கிழக்கு முகமாக 2850 கிமீ (1771 மைல்கள்) ஓடிப் பல கிழக்கு ஐரோப்பியத் தலைநகரங்கள் ஊடாகப் பாய்ந்து இறுதியில், ருமேனியா, உக்ரேன் ஆகிய நாடுகளிலுள்ள தன்யூப் கழிமுகத்தினூடாகக் கருங்கடலில் கலக்கிறது.
தற்போது உள்ளதுபோலவே தன்யூப் ஆறு பல நூற்றாண்டுகளாக முக்கியமான ஒரு அனைத்துலக நீர்வழியாக இருந்து வருகிறது. வரலாற்றில், ரோமப் பேரரசின் நீண்ட கால முன்னிலை எல்லையாக இருந்துவந்த இது, இன்று பத்து நாடுகளின் எல்லைகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது அல்லது, அவ்வெல்லைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்நாடுகள், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோசியா, செர்பியா, பல்கேரியா, ருமேனியா, மோல்டோவா, உக்ரேன் என்பவையாகும். இவற்றுடன், இதன் வடிநிலம் இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா, பொஸ்னியாவும் ஹெர்ஸகொவினாவும், மொண்டெனெக்ரோ, மசிடோனியக் குடியரசு, அல்பேனியா ஆகிய மேலும் பல நாடுகளின் பகுதிகளாக அமைந்துள்ளது.