எத்தனால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எத்தனால் என்பது எரிநறா அல்லது வெறியம் என்னும் வகையைச் சார்ந்த ஒரு வேதிச் சேர்மம். இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும். மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் இந்த வெறியம் ஆதி காலத்தில் இருந்து ஒரு போதைப் பொருளாக அறியப்பட்ட ஒன்று. சர்க்கரையை நொதிக்கச் செய்து எத்தனால் தயாரிப்பது மனிதகுலம் அறிந்த கரிம வேதிவினைகளுள் முதன்மையானவற்றுள் ஒன்று என்று நம்பப்படுகிறது.
எத்தனாலை வேதியியலில் C2H5OH என்று குறிப்பர்.
[தொகு] மாற்று எரிபொருளாக எத்தனால்
அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது. நேரடியாக வாகன எரிபொருளாகவும், கன்னெய் (பெட்ரோல்) போன்ற பிற வாகன எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம். எரிபொருளுக்காக எத்தனாலைப் பயன்படுத்துவது பல நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் (~90%) அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தான் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்காவில் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்பில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப் படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனால் தயாரிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. குறிப்பு: 2005இல் எத்தனால் தயாரிப்பு சுமார் ஒன்பது பில்லியன் கேலன்கள்.
பிரேசிலில் விற்கப்படும் கன்னெய்களில் சுமார் 20% எத்தனால் கலக்கப் படுகிறது. நேரடியாகத் தூய்மையான நீரற்ற எத்தனாலையும் வாகன எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். பிரேசிலின் வாகனங்களில் சுமார் பாதியளவில் நேரடியாக எத்தனாலை மட்டுமே வைத்து ஓட்ட முடியும். நெகிழ்-எரி-எந்திரங்களில் முழுமையாக எத்தனாலையோ, அல்லது முழுமையாகப் பெட்ரோலையோ, அல்லது ஏதாவதொரு விகிதத்தில் இரண்டையும் கலந்தோ பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் முழுமையாக எத்தனாலை எரிபொருளாக அனுமதிப்பதில்லை. அதிக பட்சம் 85% எத்தனாலை மட்டுமே அனுமதிக்கின்றனர். 85% எத்தனாலும், மிச்சம் 15% பெட்ரோலும் கொண்ட கலவையை E85 என்று சந்தைப் படுத்துகின்றனர்.