வெண்கலக் காலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெண்கலக் காலம், மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். இக்காலத்தில் முன்னரிலும் மேம்பட்ட உலோகவேலைத் தொழில்நுட்பம், செப்பு, தகரம் என்பவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்து உருக்குதல், வெங்கலம் ஆக்குவதற்காக அவ்விரு உலோகங்களையும் கலத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. வெங்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டம் ஆகும். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலமும், மூன்றாவது இரும்புக் காலமும் ஆகும். இந்த முறையின் கீழ், சில பகுதிகளில், வெண்கலக் காலம், புதிய கற்காலத்தை அடுத்து வருகிறது. ஆபிரிக்காவின் சில பகுதிகளில், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது.