பேர்ள் துறைமுகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேர்ள் துறைமுகம் (Pearl Harbor) ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹொனலூலுவின் மேற்கே அமைந்துள்ள ஒவாகு தீவில் உள்ள ஒரு துறைமுகம். இத்துறைமுகத்தின் மிகப் பெரும்பாலான பகுதிகளும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு முக்கிய கடற்படைத்தளமும் ஐக்கிய அமெரிக்கப் பசிபிக் கடற்படையின் தலைமையகமும் ஆகும். ஜப்பானியர்கள் இத்துறைமுகத்தின் மீது டிசம்பர் 7, 1941 ஆம் ஆண்டில் நடத்திய குண்டுத் தாக்குதல் ஐக்கிய அமெரிக்காவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபட வைத்தது.
[தொகு] ஜப்பானியரின் தாக்குதல்
பேர்ள் துறைமுகம் மீதான திடீர்த் தாக்குதல் ஐக்கிய அமெரிக்காவைத் திகைக்க வைத்தது எனலாம். டிசம்பர் 7, 1941 அதிகாலை ஜப்பான் பேரரசின் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களும் விமானங்களும் தளபதி இசரோக்கு யமமோட்டோ தலைமையில் இத்துறைமுகம் மீது திடீர்த் தாக்குதலை மேற்கொண்டன. இத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என ஏற்கனவே அமெரிக்கா அறிந்திருக்க ஏதுநிலை இருந்திருந்தாலும் அமெரிக்கா இத்தாக்குதலுக்குத் தயாராக இருக்கவில்லை. அன்று காலை 6:09 மணிக்கு ஆறு விமானத் தாங்கிக் கப்பல்களில் இருந்து 181 விமானங்கள் குண்டு மழை பொழிய ஆரம்பித்தன. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் இராணுவத் தளங்களும் அழிக்கப்பட்டன. மொத்தமாக 21 கப்பல்கள் அழிக்கப்பட்டு 2,350 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 68 பேர் பொது மக்கள். 1,178 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நேரடியாகக் குதித்தது.
[தொகு] வெளி இணைப்புகள்