புல்லாங்குழல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புல்லாங்குழல் ( புல்லாங்குழல் இசைக்கோப்பு) மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது.
பொருளடக்கம் |
[தொகு] இலக்கியத்தில் புல்லாங்குழல்
இந்தியாவின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு.
[தொகு] அமைப்பு
புல்லாங்குழல் மூங்கில் மரத்தினால் செய்யப்படுகின்றது. இளமையும் மூப்புமின்றி நடுவயதாய் வளர்ந்துள்ள மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் சத்தம் எழுப்புவதற்காக நுனியில் ஒரு துவாரமும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இச் சத்தத்தை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துவாரங்களையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி இது.
புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்.
[தொகு] வாசிக்கும் முறை
குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.
புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.
[தொகு] பல்வேறு குழல்கள்
உலகம் முழுவதிலுமுள்ள பல விதமான இசைகளுக்கு ஒத்ததாகப் பல்வேறு சிறிய மாற்றங்களுடன் வெவ்வேறு விதமாகப் புல்லாங்குழல்கள் செய்யப்படுகின்றன
[தொகு] பிரபல புல்லாங்குழல் மேதைகள்
- திரும்பாம்புரம் டி. என். சுவாமிநாதபிள்ளை
- டி. ஆர். மகாலிங்கம்
- டி. ஆர். நவநீதம்
- என். ரமணி