நெடுஞ்செழியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நெடுஞ்செழியன் கி.பி 160 முதல் 200 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். வட நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி சேர,சோழர்கள் பலரையும் வென்றவனும் ஆவான். சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவனுமாவான். கொங்கு குறுநில மன்னர்கள் பலரை வென்ற பெருமையினையும் உடையவனாவான். அறம் (நீதி) தவறியதால் தன்னுயிரை மாய்த்த இம்மன்னன் கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன் என்ற பெருமையினைக் கொண்டவன். இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில்
“ |
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே! பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் முத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே" |
” |
—(புறம்-183) |
"ஆசானுக்கு உதவி செய்யவேண்டும்; மிக்க பொருளைத் தரவேண்டும். பணிவோடு கற்பது நல்லது! ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் கற்றவனையே தாய் விரும்புவாள். ஒரு குடும்பத்தில் அகவையால் (வயதால்) மூத்தவனைக் காட்டிலும் கற்ற ஒருவனையே, இளையவனே ஆகிலும் முந்துரிமை தந்து போற்றுவாள் அறிவுடையோன் வழியில்தான் ஆட்சி செல்லும்! கீழ் இனத்தவன் கற்றால் மேலினத் தவனைவிட மேலாக மதிப்பர்!" என கல்வியின் சிறப்பினைப் போற்றி உயர்த்திக் கூறியுள்ளான் இப்பாண்டிய மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. இவனது ஆற்றலை வியந்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்
“ |
"வடவாரிய படை கடந்து தென்தமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்" |
” |
என இப்பாண்டிய மன்னனைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்.
[தொகு] அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு
கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய ஆணையிட்ட (உத்தரவிட்ட) நெடுஞ்செழியன், கண்ணகி சொல்லக் கேட்டு தான் அறம் வழுவியதை (நீதி தவறியதை) உணர்ந்து மனம் நொந்து "யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது" எனத் தனதுயிரை விட்டான். வளைந்த செங்கோலை தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்பாண்டிய மன்னன் செயலை நினைத்து வியந்த சேரன் செங்குட்டுவன் "பாண்டியன் செங்கோல் திறங்காக்க உயிர்விட்டானே! அரசர்களுக்கு, மழை வளம் கரப்பின் வான் பேரச்சம், பிழை இயிர் எய்தில் பெரும் பேரச்சம். கொடுங்கோலுக்கு அஞ்சி வாழ்தல் துன்பம். துன்பம் அல்லது தொழுதகவு இல்லை!" என மனம் வருந்தினான் செங்குட்டுவன் என்பது வரலாறு.