நிலப்படவரைவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிலப்படவரைவியல் என்பது, நிலப்படங்கள் தயாரிப்பது தொடர்பான ஆய்வு மற்றும் செயற்பாடுகளுக்கான துறையைக் குறிக்கும். முற்காலத்தில் நிலப்படங்கள் பேனாக்களையும், காகிதங்களையும் பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டன,ஆனால் கணினித்துறையின் வளர்ச்சியுடன் நிலப்படவரைவியலில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்காலத்தில் வணிகத்தரம் கொண்ட நிலப்படங்கள் பெரும்பாலும் நிலப்படம்வரையும் மென்பொருட்கள் மூலமே உருவாக்கப்படுகின்றன. இவை, கணினி உதவி வரைதல் (CAD) மென்பொருள், புவியியல் தகவல் முறைமை (GIS), சிறப்பு நிலப்பட வரைதல் மென்பொருள் ஆகிய வகைகளுள் ஒன்றைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.
நிலப்படங்கள், இடஞ்சார் தரவுகளுக்கான கட்புலன் கருவிகளாக (visualization tools) இருக்கின்றன. இடஞ்சார் தரவுகள், அளத்தல் மூலம் பெறப்பட்டுத் தகவல்தளங்களில் சேமிக்கப்படலாம். இவற்றைப் பின்னர் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக அங்கிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். இந்தத் துறையின் இன்றைய போக்கு, முன்னைய அனலாக் முறையிலிருந்து, கூடிய இயங்கியல் தன்மைகள் கொண்டதும், ஊடுதொடர்பாடல் வசதிகளை வழங்கக்கூடியதும், டிஜிட்டல் முறைகள் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதுமான வழிமுறைகளை நோக்கிச் செல்கின்றது.
உலகம் அளக்கப்படக் கூடியது மற்றும் அதன்மூலம், நம்பத்தகுந்தவகையில் மெய்யான உலகைப் பிரதிநிதித்துவப் படுத்தலாம் என்ற கருத்துக்களின் அடிப்படையிலேயே நிலப்படவரைவியல் வழிமுறைகள் தங்கியுள்ளன. நிலப்பட ஆக்கம், உயர்தரத்திலான திறமைகளையும், மனப்பாங்கையும் வேண்டிநிற்கிறது. புவியியல் தோற்றப்பாடுகள் தொடர்பான குறியீடுகளின் பயன்பாட்டிலும், குறுக்கப்பட்ட அளவில், பண்பியல் அடிப்படையில் உலகைப் பார்த்துச் செயல்படுவதிலும் இவ்வாறான திறமைகள் தேவைப்படுகின்றன.