நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (பெப்ரவரி 19, 1473 - மே 24, 1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். சூரியனை மையமாகக் கொண்ட சூரியக் குடும்பக் கோட்பாட்டை உருவாக்கியவர் இவரே. இவர் போலந்தின் மகாணங்களிலொன்றான அரச பிரஷ்யாவின், தோரன் (தோர்ன்) இல் பிறந்தவர். சிலர் இவர், ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்த போலந்து நாட்டவர் என்று கருதுகிறார்கள். இவர், தேவாலய canon, ஆளுனர், நிர்வாகி, ஜூரர், சோதிடர், வைத்தியர் எனப் பலவாகவும் இருந்திருக்கிறார்.
புவி மையக் கோட்பாட்டுக்கு மாறாக, இவர் முன்வைத்தசூரிய மையக் கோட்பாடு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக் கண்டுபிடிப்பே நவீன வானியலின் அடிப்படையாகும்.
[தொகு] வாழ்க்கை வரலாறு
இவரது தந்தையார் அக்காலப் போலந்தின் தலை நகரமான கராக்கோவின் குடிமகனாவார். பின்னர் அங்கிருந்து தோரன் நகருக்குக் இடம்பெயர்ந்து அங்கும் ஒரு மரியாதைக்குரிய குடிமகனாக இருந்தார். செப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு செல்வந்த வணிகராகத் திகழ்ந்த இவர், நிக்கோலாஸுக்குப் பத்துவயதாகும்போது காலமானார். இவரது தாயார் "பார்பரா வட்சென்ரோட்" பற்றி அதிகம் அறியவரவில்லை. எனினும், கணவனுக்கு முன்னரே இவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. தந்தையாரின் மறைவுக்குப் பின்னர், நிக்கோலாஸும் அவரது மூன்று உடன்பிறப்புக்களும் (ஒரு சகோதரன், 2 சகோதரிகள்) அவர்களது தாய்மாமனொருவரால் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
1491ல் கோப்பர்னிக்கஸ் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். இங்கே தான் அவருக்கு வானியலுடன் பழக்கம் ஏற்பட்டது.இவரது ஆசிரியராக இருந்த அல்பேர்ட் புருட்செவ்ஸ்கி (அல்பேர்ட் பிளார்) என்பவரின் உதவியால் அவருக்கு வானியலில் ஆர்வம் ஏற்பட்டது. நான்கு வருடங்களுக்குப் பின்னர், மேலும் சில காலம் தோரனில் தங்கியிருந்தபின்னர், இத்தாலிக்குச் சென்று அங்குள்ள பொலொக்னாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவரது கல்விக்குப் பண உதவி புரிந்த அவரது மாமனார், கோப்பர்னிக்கஸ் ஒரு பேராயராகவும் வரவேண்டுமென விரும்பினார். அங்கே படித்துக்கொண்டிருந்தபோது, பிரபல வானியலாளருமாயிருந்த, ஆசிரியர் டொமெனிக்கோ மரியா நோவரா டா பெராரா என்பவரைச் சந்தித்தார். கோப்பர்னிக்கஸ் அவரிடம் படித்ததோடு அவருடைய சீடராகவும், உதவியாளராகவும் ஆனார்.