ஒளியாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
SI அலகுகள் | |
---|---|
9.461×1015 மீ | 9.461×1012 கிமீ |
வானியல் அலகுகள் | |
63.24×103 வாஅ | 1 ஒஆ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
31.04×1015 அடி | 5.879×1012 மை |
ஒளியாண்டு என்பது ஒளியானது ஓர் ஆண்டுக் கால அளவில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு நீள அளவு அலகு ஆகும். விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலியன இருக்கும் தொலைவை அளக்க வானியலில் அளக்கப் பயன்படுத்தும் அலகு.
வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. நட்சத்திரங்கள், மிகப்பெரும் விண்மீன்களின் கூட்டங்களாகிய நாள்மீன்பேரடைகள் மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் பலவகைப் பொருட்களிடையேயான தூரங்கள் மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அளவைகளால் அளப்பது வசதியாய் இராது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல, ஒளியாண்டுத் தொலைவு என்னும் ஒரு நீள அலகு.
[தொகு] வரைவிலக்கணம்
ஒளியாண்டில் குறிக்கப்பெறும் ஆண்டானது ஒரு ஜூலியன் ஆண்டாகும். ஒரு ஜூலியன் ஆண்டில் 86400 நொடிகள் (செக்கன்கள்) கொண்ட 365.2 நாட்கள் உள்ளன. ஒளியாண்டின் துல்லியமான வரையறை பின்வருமாறு கூறப்படும்:
ஒளித்துகளாகிய ஓர் ஒளியன் (photon), எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் எவ்வித விசைப்புலங்களுக்கும் உட்படாமல், தன்னியல்பால் அணுக்கள் இல்லாப் புறவெளியில் ஓரு ஜூலியன் ஆண்டுக்காலம் செல்லும் தொலைவே ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது.
ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு (செக்கனுக்கு) 299,792,458 மீட்டர்களாகும். எனவே ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு, அண்ணளவாக 9.46 × 1015 மீ = 9.46 பேட்டா மீட்டர் ஆகும்.
ஒளியாண்டோடு தொடர்புள்ள அலகுகளான ஒளி-நிமிடம், ஒளி-நொடி என்பன ஒளி, வெற்றிடத்தில் முறையே ஒரு நிமிடம், ஒரு நொடி (செக்கன்) என்னும் கால இடைவெளிகளில் செல்லும் தொலைவைக் குறிக்கின்றன. ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஒளி-நொடி 299,792,458 மீட்டர்களாகும்.
[தொகு] சில துணுக்குத் தகவல்கள்
- சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8 நிமிடங்கள் எடுக்கிறது. எனவே சூரியன் பூமியிலிருந்து 8 ஒளி-நிமிட தொலைவில் உள்ளதாகக் கூறலாம்.
- மாந்தைன் மிக மிகத் தொலைவான விண்வெளி ஆய்வுப்பயணம், வொயேஜர் 1, ஜனவரி 2004 ல், 12.5 ஒளி-மணித் தொலைவில் இருந்தது.
- பூமிக்கு மிக அண்மையிலுள்ள விண்மீனான புரொக்சிமா செண்டோரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. பால்வெளி என்று அழைக்கப்படும், நாம் வாழும் நாள்மீன்பேரடையின் குறுக்களவு 100,000 ஒளியாண்டுகளாகும்.
- நாம் கண்ணாலும், தொலைநோக்கிகளாலும், பிற துணைக்கருவிகளாலும் உணரக்கூடிய அண்டம் அண்ணளவாக 15,000,000,000 ஒளியாண்டுகள் ஆரம் அல்லது ஆரையைக் (radius) கொண்டது. இந்த ஆரையின் நீளமானது ஒரு நொடிக்கு ஓர் ஒளி-நொடி வீதம் அதிகரித்துச் செல்லுகிறது.