ஒளித் தெறிப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒளித் தெறிப்பு அல்லது ஒளி எதிர்வு என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.
நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஒரு அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும்.
இவ்வொளி எதிர்வுகளை நன்றாக ஆய்ந்து பல உணமைகளை நிறுவியிருக்கிறார்கள். இதில் சிநெல் (Snell) என்பாரின் விதிகள் எளிதாக அறியவல்லவை. ஒளி எதிரக்கூடிய ஒரு சமதளத்தில் ஒளியானது அச்சம தளத்தின் செங்குத்துக் கோட்டுக்கு ஒரு குறிப்பிட்ட கோணத்திலே சென்று மோதினால், எதிர்ந்து செல்லும் ஒளியும் அதே கோணத்தில் அச்செங்குத்துக்கு கோட்டிலிருந்து விலகி எதிர்த் திசையில் செல்லும். இதனை படத்தின் உதவியால் எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.
படத்தில், ஒளிக்கதிர் PO நிலைக்குத்துக் கண்ணாடியொன்றை O என்ற புள்ளியில் மோதி, OQ என்ற காதிராகத் தெறிக்கிறது. கண்ணாடியின் தளத்துக்குச் செங்குத்தாக O என்ற புள்ளியில் இருந்து ஒரு நேர்கோட்டை வரைந்தால் படுகோணம் θi, தெறிகோணம் θr ஆகியவற்றைக் கணக்கிடலாம். தெறிப்பு விதியின் படி, θi = θr, அதாவது, படுகோணம் தெறிகோணத்துக்குச் சமனாக இருக்கும்.