உழைப்பு (பொருளியல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செந்நெறிப் பொருளியலிலும், எல்லா நுண்மப் பொருளியலிலும், உழைப்பு என்பது, மனிதர்களால் செய்யப்படுகின்ற வேலையின் அளவை என்பதுடன், மூன்று உற்பத்திக் காரணிகளுள் ஒன்றும் ஆகும். நிலமும், மூலதனமும் ஏனைய இரண்டு காரணிகள். பருவினப்பொருளியலில், சில கோட்பாடுகள் மனித மூலதனம் எனும் கருத்துருவொன்றை உருவாக்கி முன்வைத்துள்ளன. இது வேலையாட்கள் செய்கின்ற உண்மையான வேலையை அன்றி அவர்களிடம் உள்ள திறமையைக் குறிக்கிறது. பருவினப் பொருளியலின் வேறு கோட்பாடுகள், மனித மூலதனம் என்பது ஒரு முரண்பாடான சொற் பயன்பாடு எனக்கூறுகின்றன.
[தொகு] உழைப்பிற்கான ஈடும், அளவீடும்
உழைப்பிற்கான அடிப்படையான ஈடு கூலியாகும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான ஈடு, கூலி வீதம் எனப்படும். இவ்விரு சொற்களும் சில சமயம் ஒரே பொருளிலும் பயன்படுத்தப்படுவதுண்டு. இது தொடர்பான கருத்துருக்களாவன:
- கூலி - ஒரு கால அலகுக்கான கொடுப்பனவு (பெரும்பாலும் ஒரு மணிநேரத்துக்கு)
- சம்பாத்தியம் (earnings) - குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறப்பட்ட கொடுப்பனவு. (ஒரு வாரம், மாதம் அல்லது ஆண்டு)
- மொத்த ஈட்டுத்தொகை - சம்பாத்தியம் + உழைப்புக்கான பிற நலக் கொடுப்பனவுகள் (benefits).
- வருமானம் - மொத்த ஈட்டுத்தொகை + உழைப்புசாரா வருமானம் (Unearned income)
பொருளியலாளர்கள், உழைப்பை, உழைப்பின் நேரம், மொத்தக் கூலி, அல்லது செயற்திறன் (efficiency) என்பவற்றின் மூலம் அளவிடுகிறார்கள்.
[தொகு] மாக்சியப் பொருளியல்
கூட்டு மனித உழைப்பை உகந்த (optimal) முறையில் ஒதுக்கீடு செய்யும் விடயத்தில் தெளிவுண்டாக்கி வழிகாட்டுவதே மாக்சியப் பொருளியலின் நோக்கம் ஆகும். நுண்மப் பொருளியலில் காணப்படுவதுபோல் மேற்கூறிய உகந்த தன்மையானது, மாக்சியப் பொருளியலில் ஒரு நுட்பியல் மாறியாகக் (technical variable) கருதப்படுவதில்லை. ஏனெனில், தொழிலாளர்கள் ஒரு உற்பத்திக் காரணி மட்டுமல்ல, அவர்கள் தங்களைத் தாங்களும், ஒருவரையொருவரும் ஒழுங்கமைப்புச் செய்து கொள்கிறார்கள்.