ஹென்றி கிரேயின் மனித உடற்கூறு இயல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹென்றி கிரேயின் மனித உடற்கூறு இயல் (Henry Gray's Anatomy of the Human Body) என்பது முதன் முதலாக 1858 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வெளியான ஒரு புகழ்பெற்ற ஆங்கிலப் பாடநூல். 1858ல் வெளியான பொழுது அதன் தலைப்பு Gray's Anatomy: Descriptive and Surgical (கிரேயின் அனாட்டமி: டிஸ்க்ரிப்டிவ் அண்ட் சர்ஜிக்கல்) (கிரேயின் உடற்கூறு இயல்: அமைப்பு விளக்கமும் அறுவையும்). அதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் வெளியானது. தொற்றுநோயால் உடலில் ஏற்படும் உடற்கூறு இயல் மாற்றங்களை அறியும் பொழுது ஹென்றி கிரேக்கு பெரியம்மை நோய் ஏற்பட்டு 1960ல் தம் 34 ஆவது அகவையில் (வயதில்) இறந்துவிட்டார். அவர் தொடங்கிய புத்தகத்தை மற்றவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி நவம்பர் 24, 2004ல் இங்கிலாந்தில் 39 ஆவது பதிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
[தொகு] ஹென்றி கிரேயின் வாழ்க்கை
ஆங்கிலேய உடற்கூறு இயலாளர் ஹென்றி கிரே 1827ல் பிறந்தார். இவர் நாளமில்லாச் சுரபிகள் பற்றியும் கனையத்தைப் பற்றியும் படித்தார். பின்னர் 1853ல் செயின்ட் ஜார்ஜ் மருத்துவ மனை உள்ள கல்லூரியில் உடற்கூறு இயல் துறையில் விரிவுரையாளராக பணியேற்றார். 1855ல் டாக்டர் ஹென்றி 'வான்டைக் கார்ட்டர் (Dr Henry Vandyke Carter) என்னும் உடன் பணிபுரியும் ஆசிரியரை அணுகி உடற்கூறு பற்றி மாணவர்களுக்கு ஏற்ற நூல் எழுதும் தம் கருத்தை வெளியிட்டார்.