பருத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பருத்தி செடியிலிருந்து நாம் பலவிதமாக பயன்படுத்தும் மிருதுவான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. இச்செடியின் விதைகளைச்சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். பருத்தி செடி பூமத்தியரேகைப் பகுதியில் தோன்றியதாகும்.
பருத்தி ஒரு நல்ல பணப்பயிராகும். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது சுமார் 10% மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பல்கூறு ஆகும். இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 - 30 செல்லுலோச் பல்கூறுகள் முருக்கப்பட்டு உருவாகின்றன. பருத்திகாய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் பொது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
பூமத்தியரேகைப்பகுதியில் பருத்தி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்லிய துணிகள், ஆடைகள் தயாரிக்கப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. எகிப்தியர்கள் கி.மு 12000 த்திலேயே பருத்தியை பயன் படுத்தியதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மெக்சிகோ நாட்டு குகைகளில் 7000 ஆண்டு (சுமார் கி.மு 5000) பழமையான பருத்தி துணிகள் காணப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் இந்தியாவிலும் மெக்சிகோவிலும் பல்வேறு வகை பருத்தி செடிகள் வளர்க்கப்பட்டதற்கு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் உள்ளன.
பருத்தி பற்றிய பழங்கால குறிப்புகள் இந்தியாவில் உள்ளன. கி.மு 1500 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ரிக்-வேதத்தில் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்திய பருத்தி பற்றி புகழ் பெற்ற கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் "அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் உள்ளது. இந்திய மக்கள் இம்மரக்கம்பளி இழையிலிருந்து உடைகள் செய்து கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார் (புத்தகம் iii. 106).
கிரேக்க காலத்தில் பருத்தி ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பொருளாகவே அறியப்பட்டது. அம்மக்கள் செம்மறியாட்டு கம்பளி தவிர வேறெந்த இழையும் அறிந்திருக்கவில்லையாதலால், பருத்தி மரம் சிறு செம்மறியாடுகளைக் கொண்டதாகவே கற்பனை செய்து கொண்டனர். 1350 இல் ஜான் மான்டவில் என்பவர் எழுதியதாவது "இந்தியாவில் வளரும் இந்த அற்புதமான செடி அதன் கிளை நுனிகளில் சிறு செம்மறியாடுகளைக் கொண்டிருந்தது. இக்கிளைகள் ஆடுகளுக்குப் பசித்த போது கீழ் நோக்கி வளைந்து அவற்றை மேய விட்டன". (பார்க்க படம்). இன்றும் பல ஐரொப்பிய நாடுகளில் பருத்தியை குறிக்கும் சொல் இதனை நினைவு படுத்தும் விதமாகவே உள்ளது (எ.கா. ஜெர்மனியில் பருத்தி "மரக்கம்பளி இழை" என்ற பொருளில் பொம்வுல் என்று அழைக்கப்படுகிறது).
16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பருத்தி ஆப்பிரிக்கா, யூரேசியா மற்றும் அமெரிக்காவின் வெப்பமான பகுதிகளில் பயிர் செய்யப்பட்டது. இங்கிலாந்தின் தொழில் புரட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு இயந்திரங்கள், இந்திய பருத்தி தொழிலை நசிவடையச் செய்தன. அமெரிக்காவில், பருத்தி, இன்டிகோ மற்றும் புகையிலை வளர்ப்பு அடிமை மக்களின் தொழிலாக இருந்து வந்தது. பின்னர் அடிமைகள் சம-உரிமை பெற்ற பிறகு குத்தகை முறை விவசாயத்திலும் அவர்கள் இவற்றையே பயிர் செய்தனர்.
1996 ஆம் ஆண்டு பெரும்பாலான புழு வகை அழிவிக்கும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட மரபணு பி.டி பருத்தி (XXX) எனும் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அறிமுகப் படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாக வாரங்கல் பகுதியில் ஸ்போடாப்டிரா புழுவினால் பருத்தி பயிர் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
[தொகு] உற்பத்தி
தற்போது பருத்தி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. அதிக அளவில் பஞ்சு இழைகளை உருவாக்கவல்ல இரகங்கள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டில் 330,000 ச.கி.மீ. பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2.1 கோடி டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டது.
பருத்தி விவசாயிகள் பெரும்பாலும் வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் நம்பியுள்ளனர். சமீபமாக, சில விவசாயிகள் இயற்கை விவசாய முறையில் பருத்தி பயிரிடத் துவங்கியுள்ளனர். அமெரிக்கவைப் பொருத்தவரை பஞ்சுக்காய் வண்டு (Boll weevil) ஒரு முக்கியமான அழிவிக்கும் பூச்சியாகும். இந்தியாவில், பஞ்சுக்காய் புழு (Boll worm) மற்றும் ஸ்போடாப்டிரா (Spodoptera exigua) புழுக்கள் அதிக அளவில் சேதம் விளைவிக்கின்றன.
மேலை நாடுகளில் பஞ்சு பெரும்பாலும் இயந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்யப்படுகிறது. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இலைகள் உதிர்ந்ததும் பஞ்சுக்காய்கள் பறிக்கப்படுகின்றன அல்லது தகுந்த இரங்களில் பஞ்சு மட்டும் காயிலிருந்து பறிக்கப்படுகிறது. பூமத்திய ரேகைப்பகுதியில் பஞ்சு பல போகங்கள் தொடர்ந்து வளரக்கூடியது.
[தொகு] பயன்கள்
பருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன் படுகின்றது, மற்றும் மீன்பிடி வலைகள், கூடாரங்கள், புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன் படுத்தப்படுகிறது. சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது. தற்பொதைய அமெரிக்க டாலர் நோட்டும், அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே தயாராகின்றன.டெனிம் எனும் உறுதியான துணி வகை பெரும்பாலும் பருத்தி கொண்டே தயாரிக்கப்படுகிறது.
பஞ்சு பிரிக்கப்பட்ட பருத்தி விதைகளிலிருந்து பருத்திக்கொட்டை எண்ணை ஆடப்படுகிறது. சுத்தகரிக்கபட்ட பின், இது மனிதர்களால் மற்ற சமையல் எண்ணைகள் போலவே பயன் படுத்தப் படுகிறது. எண்ணை பிரித்த பின் கிடைக்கும் புண்ணாக்கு தீவனமாக பயன் படுகிறது.
[தொகு] வணிக நீதி இயக்கம்
பருத்தி உலகெங்கிலும் ஒரு முக்கியமான பணப்பயிராக இருப்பினும், வளரும் நாடுகளிலுள்ள விவசாயிகளுக்கு குறைந்த அளவே இலாபம் கிடைக்கிறது. அவர்களால் முன்னேறிய நாடுகளிலுள்ள பெரும் விவசாயிகளுடன் போட்டியிட முடிவதில்லை. இது [வணிக நீதி இயக்கம்] மூலம் சில நாடுகளில் சரி செய்யப்படுகிறது.
[தொகு] முன்னாள் பஞ்சு அளவைகள்
- 1 திரட் = 54 இன்ச் (சுமார் 137 செ.மீ)
- 1 ராப் அல்லது ஸ்கீன் = 80 திரட்கள் (சுமார் 109 மீ)
- 1 ஹேங்க் = 7 ஸ்கீன் (சுமார் 768 மீ)
- 1 ஸ்பின்டில் = 18 ஹேங்க் (சுமார் 13.826 கி.மீ)