குடிசார் பொறியியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குடிசார் பொறியியல் என்பது ஒரு உயர்தொழில் பொறியியல் துறையாகும். இது, பாலங்கள், கால்வாய்கள், சாலைகள், அணைகள், கட்டிடங்கள் போன்றன உள்ளிட்ட கட்டிடச் சூழலின் வடிவமைப்பு, கட்டுமானம் என்பவற்றோடு தொடர்புடையது. படைத்துறைப் பொறியியலுக்கு அடுத்ததாக மிகப் பழைமையான பொறியியல் துறை இதுவாகும். இப் பொறியியல் துறையைப் பல துணைத்துறைகளாகப் பிரிப்பது வழக்கம். சூழலியல் பொறியியல், நிலத்தொழில்நுட்பப் பொறியியல், கட்டமைப்புப் பொறியியல், போக்குவரத்துப் பொறியியல், காற்றுப் பொறியியல், நீர்வளப் பொறியியல், பொருட் பொறியியல், கரையோரப் பொறியியல், கட்டுமானப் பொறியியல் என்பன இவற்றுட் சிலவாகும்.
[தொகு] குடிசார் பொறியியல் தொழில் துறையின் வரலாறு
.
மனிதன் தோன்றியது முதலே பொறியியல் அவனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. குடிசார் பொறியியல், மனிதன் நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டுத் தனக்கென வீடுகளை அமைத்துக்கொள்ளத் தொடங்கிய கிமு 4000 தொடக்கம் 2000 வரையிலான காலப்பகுதியில் எகிப்து, மெசொப்பொத்தேமியா ஆகிய பகுதிகளில் முறையாகத் தொடங்கியது எனலாம். இக்காலத்தில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் பெறத்தொடங்கி சில்லு, பாய்களைக் கொண்டு கடலோடுதல் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. கிமு 2700-2500 காலப்பகுதியில் எகிப்தில் அமைக்கப்பட்ட பிரமிட்டுகளே முதல் பெரிய கட்டுமான அமைப்புக்கள் எனலாம். சிந்துவெளி நாகரிகம், கிரேக்க நாகரிகம், ரோம நாகரிகம் போன்ற கிறிஸ்துவுக்கு முந்தியகால நாகரிகங்களிலும் குடிசார் பொறியியல் வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டுக்களைக் காணமுடியும்.
மிக அண்மைக்காலம் வரை குடிசார் பொறியியலுக்கும், கட்டிடக்கலைக்கும் இடையில் வேறுபாடு இருக்கவில்லை. பொறியியலாளர், கட்டிடக்கலைஞர் என்னும் சொற்கள் பெரும்பாலும் ஒருவரைக் குறிக்கப் வெவ்வேறு இடங்களில் பயன்பட்டவையாகவே இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில், துறைமுகங்கள், கலங்கரை விளக்கங்கள் போன்றவற்றின் கட்டுமானங்கள் தொடர்பில் குடிசார் பொறியியல் தனியாகக் குறிப்பிடப்படும் ஒரு துறையாக வளர்ந்தது.
[தொகு] குடிசார் பொறியியல் அறிவியலின் வரலாறு
எகிப்தின் பிரமிட்டுக்களைத் தொடர்ந்து, பண்டைய கிரேக்கத்திலும், ரோமிலும் பெரிய அமைப்புக்கள் உருவாகின. அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம், எண்ணற்ற கோயில்கள், நீத்தார் நினைவுச் சின்னங்கள், பல்வேறு நினைவுத் தூண்கள் என்பன இவற்றுள் அடக்கம். ரோமர்கள், நீர்காவிகள், துறைமுகங்கள், பாலங்கள், அணைகள், சாலைகள் போன்ற பல்வேறு பயன்பாடு அமைப்புக்களைத் தமது பேரரசு முழுவதும் அமைத்தனர்.
குடிசார் பொறியியல், இயற்பியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகளின் பயன்பாடு ஆகும். அதன் வரலாறு இயற்பியல் மற்றும் கணிதத்தின் வளர்ச்சிகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. குடிசார் பொறியியல், பல துணைத் துறைகளை உள்ளடக்கிய ஒரு பரந்த துறை என்பதால், அதன் வரலாறு, அமைப்பியல், பொருள் அறிவியல், நிலவியல், மண்ணியல், நீரியல், சூழலியல், பொறிமுறை போன்ற துறைகளில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சிகளோடு தொடர்புடையது. குடிசார் பொறியியலோடு தொடர்புடைய, இயற்பியல் மற்றும் கணிதம் சார்ந்த பிரச்சினை தொடர்பிலான அறிவியல் அணுகுமுறையின் முந்திய எடுத்துக்காட்டு கிமு 3 ஆம் நூற்றாண்டில் ஆக்கிமிடீஸ் செய்த ஆய்வுகள் ஆகும்.