இனம் (உயிரியல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உயிரியலில், இனம் என்பது உயிரியல் வகைப்பாடு மற்றும் பெயரீட்டுத் தரநிலை தொடர்பிலான அடிப்படை அலகுகளில் ஒன்றாகும். பொதுவாக இனம் என்பது, தங்களுக்குள் கலந்து இளம் உயிரினங்களை உருவாக்கக் கூடிய ஒரு தொகுதி உயிரினங்கள் என வரையறுக்கப்படுகின்றது. பெரும்பாலான தேவைகளுக்கு இந்த வரைவிலக்கணம் போதுமானது. எனினும், டிஎன்ஏ ஒப்புமை அல்லது உருவாக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான அல்லது வேறுபட்ட முறைகளிலும் இனம் என்பதற்கு வரைவிலக்கணம் தரப்படுவது உண்டு. இனங்களுக்குள் காணப்படும் சூழல் சார்ந்த இயல்பு வேறுபாடுகள், அவற்றைப் பல்வேறு துணையினங்களாகப் பிரிப்பதற்கு வழி வகுக்கின்றன.
உயிரினங்களுக்கு வழங்கிவரும் பொதுப் பெயர்கள் சில வேளைகளில் இனங்களுக்கான அறிவியல் பெயராகவும் வழங்கப்படுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட நெருக்கமான உறவுடைய இனங்கள் சேர்ந்து பேரினம் என்னும் பகுப்பு உண்டாகின்றது. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு இருசொற் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பெயரின் முதற்சொல் பேரினத்தையும், மற்றது இனத்தையும் குறிக்கின்றன.