சிரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரத்த ஓட்ட மண்டலத்தில் இதயத்தை நோக்கி இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் சிரைகள் (Veins)எனப்படுகின்றன. இரத்தத்தை இதயத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் (Arteries) எனப்படுகின்றன.
[தொகு] செயற்பாடு
சிரைகள் இரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களில் இருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உடல் இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தமானது இடது வெண்ட்டிரிக்கிளில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் கேப்பில்லரிகளில் பரிமாறப்படுகின்றன. பின் கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்த இரத்தம் சிரைகளின் வழியாக வலது ஏட்ரியத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குருதியானது பின் வலது வெண்ட்டிரிக்கிளுக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
நுரையீரல் இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை நுரையீரல் சிரைகள் இதயத்தின் இடது ஏட்ரியத்திற்குக் கொண்டு செல்கின்றன. பின் இது இடது வெண்ட்டிரிக்கிளுக்கும் அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் அனுப்பப் படுகிறது. இந்த இரத்த ஓட்டச் சுழற்சியானது தொடர்ந்து நடைபெறுகிறது.