சந்திரகுப்த மௌரியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சந்திரகுப்த மௌரியன் | |
---|---|
மௌரியப் பேரரசு | |
சந்திரகுப்த மௌரியனின் உருவம் தாங்கிய இந்தியத் அஞ்சல் தலை | |
ஆட்சியில் | கிமு 322-கிமு 298 |
பிறப்பு | கிமு 340 |
இறப்பு | கிமு 298 |
பின்வந்தவர் | பிந்துசாரன் |
அரசு மனை | மௌரிய மரபு |
தாய் | முரா |
சந்திரகுப்தன் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவிய அரசனாவான். இவன் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றிபெற்றான். இதனால் சந்திரகுப்தன் இந்தியாவை ஒன்றாக்கிய முதலாவது மன்னன் எனப்படுவதோடு, இந்தியாவின் முதலாவது உண்மையான பேரரசன் எனவும் புகழப்படுகின்றான். கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலுள்ள படைப்புக்களில் சந்திரகுப்தன், சாண்ட்ரோகுப்தோஸ் (Sandrokuptos), சாண்ட்ரோகாட்டோஸ் (Sandrokottos), ஆண்ட்ரோகாட்ட்டஸ் (Androcottus) போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றான்.
சந்திரகுப்தன் தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ளுமுன் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் பல சிறிய அரசுகள் இருந்தன. கங்கைச் சமவெளியில் நந்தப் பேரரசு வலுவாக இருந்தது. இவற்றைக் கைப்பற்றிய சந்திரகுப்தனின் பேரரசு, கிழக்கே வங்காளம், அசாம் ஆகிய இடங்களிலிருந்து மேற்கே ஆப்கனிஸ்தான், பலுச்சிஸ்தான் வரையும், வடமேற்கில் காஷ்மீர், வடகிழக்கில் நேபாளம், தெற்கில் தக்காண மேட்டுநிலம் வரையும் விரிவடைந்தது.
20 வயது மட்டுமே ஆகியிருந்த போது அலெக்சாண்டரின் படைகளைத் தோற்கடித்தது, நந்தப் பேரரசைக் கைப்பற்றியது, போன்றவற்றிலிருந்து, செலூக்கஸ் நிக்கேட்டரைத் தோற்கடித்து தெற்காசியாவில் ஒரு மைய ஆட்சியை உருவாக்கியது வரையான சாதனைகளைப் புரிந்த சந்திரகுப்தன் இந்திய வரலாற்றில் மிகப் புகழ் பெற்ற மன்னர்களில் ஒருவனாக விளங்குகின்றான்.
இவருடைய கடைசிக்காலத்தில் சமண நெறியைத் தழுவினார். இவருக்கு அடுத்து இவருடைய மகன் பிந்துசாரர் மௌரியப் பேரரசின் மன்னரானார்.