வைகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வைகை என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பெரியார் பீடபூமியில் தோன்றி வடகிழக்காகப் பாய்ந்து, வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும், தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழி பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது.வைகை ஆற்றின் நீளம் 258கி.மீ. பாசனப் பரப்பு 7031ச.கி.மீ.
பொதுவாக மழைக்காலத்தில், குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும்.பிற காலங்களில் பொதுவாக வறண்டே காணப்படும்.
[தொகு] துணை ஆறுகள்
சுருளியாறு, தேனியாறு, வராகநதி, மஞ்சளாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும்.
பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன்(வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனி க்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது.
1895ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, கேரள, தமிழக எல்லையில் உற்பத்தியாகும் பெரியாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டப்பட்டு ஒரு பகுதி நீர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடைவின் மூலம் வைகையில் திருப்பிவிடப்படுகிறது.
[தொகு] அணைகள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 7கி.மீ தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.இந்த அணையின் ஆழம் 21.64மீ (71அடி). மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன மீட்டர் (172 மில்லியன் கன அடி).
நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணை, மதுரை விரகனூர் மதகு அணை போன்றவை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த பிற அணைகளாகும்.
[தொகு] பண்பாட்டு முக்கியத்துவம்
தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது."வையை என்னும் பொய்யாக் குலக்கொடி", "ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை" என்பன போன்ற தொடர்கள் நிலவுகின்றன.
இந்து சமயப் புராணங்கள் சிவபெருமானின் திருவிளையாடல்கள் வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்ததாகக் கூறும்.வடமொழி நூல்கள் வைகை நதியை ""க்ருதமாலா" நதி என்று குறிக்கின்றன.
இபின் பட்டுடாவாலும் மார்க்கோபோலோவாலும் வைகை நதி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏராளமான தமிழ் திரைப்படப் பாடல்களிலும் வைகையாறு குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் "வைகை ஆற்றில் இறங்குதல்" பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது.
தனிநபர்களின் இயற்பெயர்களிலும், புனைபெயர்களிலும் மேலும் அங்காடிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்களிலும் "வைகை" இடம்பெறுவது கண்கூடு.வைகை எக்ஸ்ப்ரஸ் அத்தகையவற்றுள் முக்கியமான ஒன்று.