மாதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாதம் என்பது ஒரு கால அளவாகும். மாதம் என்ற ஒரே சொல்லே பல்வேறு சமுதாயங்களில் புழக்கத்திலுள்ள, இதையொத்த ஆனால் சிறிது வேறுபடுகின்ற கால அளவுகளைக் குறிக்கப் பயன்பட்டுவருகின்றது. வெவ்வேறு பண்பாடுகளில் இக் காலக் கணிப்பிற்குரிய அடிப்படைகள் வெவ்வேறாக அமைந்திருப்பதாலேயே மாறுபட்ட கால அளவுகளைக் கொண்ட மாதங்கள் வழக்கிலுள்ளன. சிறப்பாக இரண்டு வகையான மாதங்களைக் குறிப்பிடலாம்.
- சூரியமாதம்
- சந்திரமாதம்
சூரியமாதம் என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு ஆண்டு ஆகும். பூமியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றிய அண்டவெளி, ஒவ்வொன்றும் 30 பாகைகள் கொண்ட 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும், 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இந்தியாவில் மலையாளிகளும், தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள்.
சந்திரமாதம் என்பது, சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். சந்திரமாதத்தைக் கைக்கொள்ளும் சில சமுதாயங்களில் ஒவ்வொரு மாதமும் பூரணையில் தொடங்கி அடுத்த பூரணை வரையிலான காலமாக இருக்க, வேறு சில பண்பாடுகளில் மாதம், ஒரு அமாவாசையில் தொடங்கி அடுத்த அமாவாசைக்கு முன் முடிவடைகிறது. வட இந்தியாவில் பெரும்பாலும் சந்திரமாதமே புழக்கத்தில் உள்ளது. இஸ்லாமியர்களும் இம்முறையையே கடைப்பிடித்து வருகிறார்கள்.
இவற்றைவிட அனைத்துலக அளவில் இன்று புழங்கி வருகின்ற முறையின்படி, மாதம் என்பது நேரடியாகச் சந்திரன் அல்லது சூரியனின் இயக்கத்தை வைத்துக் கணிக்கப்படுவதில்லை.