சிவலிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிவலிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வரிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.
[தொகு] சொற்பொருள்
லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண்குறியைக் குறிப்பதாகவும், வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது. வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத அகராதி 17 பொருள்களை இச் சொல்லுக்குக் கொடுத்துள்ளது. இவற்றுள்,
- இறைவனின் வடிவம்
- நோய்க்கான அறிகுறி
- ஒரு புள்ளி அல்லது மறு
- சான்று அல்லது சான்றுக்கான வழிமுறை
- விளைவு அல்லது முதற் காரணத்தில் இருந்து உருவாகும் ஒன்று.
- பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு.
- ஆண்குறி.
என்பனவும் அடங்கும்.