கிரெகொரியின் நாட்காட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிரெகொரியின் நாட்காட்டி என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது யூலியின் நாட்காட்டியின் ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்பவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய பாப்பரசரான 13வது கிரெகரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இதன்படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன, மேலும் இக்காலப்பகுதி "எம் ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6வது நூற்றாண்டில் உரோமை பாதிரியார் ஒருவரால் துவக்கப்பட்ட முறையாகும்.
கிரெகொரியின் நாட்காட்டியானது யூலியின் நாட்காட்டி சராசரி ஆண்டைவிட நீளமக காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள் நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதை திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது. மேலும் உயிர்த்த ஞாயிறு நாளை கணிக்கிட பயன்பட்ட சந்திர நாட்காடியும் பல கோளாறுகளை கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.