எம். ஆர். ராதா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எம். ஆர். ராதா (பெப்ரவரி 21, 1907 - செப்டம்பர் 17, 1979) தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபால் நாயுடுவின் மகன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார்.[1]
சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துகொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார்.
நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவர் ராதாவுடன் ஒத்த அரசியல் மற்றும் கருத்துச் சாய்வு கொண்டிருந்தார். அவரைக் காதலித்து மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவர் அம்மை நோயால் இறந்து விட்டார்.[2] அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்து விட்டான். பின்னர் மறுமணம் செய்து கொண்டார். இவரது மகன்கள் எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி மற்றும் மகள்கள் ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர்.
எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று இராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மு.க.முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக பெரியாருடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.
அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
[தொகு] நடிப்பு
ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை ஐந்து படங்கள் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.
பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் தனது மிகுவெற்றி நாடகமான ரத்தக் கண்ணீரின் திரை வெளியீடான ரத்தக்கண்ணீர் படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது 'இழந்தகாதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.
எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.
[தொகு] அரசியல் வாழ்வு
துவக்கத்தில் பெரியாருடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும்,[3] பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார்.[4] காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர் பெரியார் காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார்.[3] இவரது அரசியல் சாய்வினாலும் தொழிலும் எம். ஜி. ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
தனது சீர்திருத்தக் கருத்துக்களையும், பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர்.[5]
[தொகு] நடித்த படங்கள்
எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த சில திரைப்படங்கள்:
- ரத்தக்கண்ணீர்
- ஆயிரம் ரூபாய்
- கை கொடுத்த தெய்வம்
- பாவ மன்னிப்பு
- சித்தி
- புதிய பறவை
- பலே பாண்டியா
- பெற்றால்தான் பிள்ளையா
- தாய்க்குப்பின் தாரம்
- குமுதம்
- கற்பகம்
- தாயை காத்த தனயன்
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ எம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல்-மிதக்கும்வெளியின் பதிவு
- ↑ நாராயணன், மாலன் (2006-01-027). வரலாற்றின் வழித் தடங்கள். இணைப்பு 2007-11-03 அன்று அணுகப்பட்டது.
- ↑ 3.0 3.1 சுதாங்கன் [மே 2005]. சுட்டாச்சு சுட்டாச்சு, இரண்டாம் பதிப்பு, சென்னை: கிழக்கு பதிப்பகம். ISBN 81-8368-048-8.
- ↑ ராதாவின் கொள்கைப் பிடிப்பைப் பற்றி "த இந்து" நாளிதழில் வந்த குறிப்பு (ஆங்கிலத்தில்)
- ↑ டி என், கோபாலன். "காயாத கானகத்தே", நினைவில் நின்றவை, பிபிசி, pp. எட்டாவது பாகம். 2007-11-03 அன்று தகவல் பெறப்பட்டது.
[தொகு] வெளி இணைப்புகள்
- எம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல் (மிதக்கும்வெளியின் பதிவு)
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -5
- ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா மேடைப்பேச்சு - நிகழ்படம்
- 'பாவமன்னிப்பு' படத்தில் இருந்து காட்சிகள்
- 'ரத்தக்கண்ணீர்' படத்தில் இருந்து காட்சிகள்
- நடிகவேள் எம். ஆர். ராதா நூற்றாண்டு நினைவுச் சித்திரம்
- - எம்.ஆர். ராதாயணம் - வெளியீடு: கிழக்கு பதிப்பகம்