ஈழத்துச் சிதம்பரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே 10மைல் தொலைவில் உள்ள காரைநகரிலே திண்ணபுரம் பிரிவிலே அமைந்துள்ளது. சிதம்பரத்திலே நடைபெறுவது போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் திண்ணபுரம் சிவன் கோயிலில் நடைபெறுவதால் அது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்பட்டு வருகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
இது 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே அமைக்கப்பட்டது. ஈழத்துச் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு சுந்தரேஸ்வரர் என்றும் அம்பிகைக்குச் சௌந்தராம்பிகை என்றும் பேர். இங்கு எழுந்தருளியுள்ள ஐயனார் பழமையும் சிறப்பும் மிக்க மூர்த்தியாவர். ஐயனார் கோயிலை அமைப்பதிலே முன்னின்ற அம்பலவி முருகர் என்ற பக்தரே பின்பு சிவன் கோயிலை அமைப்பதிலும் முன்னின்றவர்.
[தொகு] கோயில் அமைப்பு
கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்திக்குப் பரிவார தெய்வங்களாக அம்பாள், நடேசர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், சமயகுரவர் என்போர் எழுந்தருளியுள்ளனர்.
[தொகு] விசேட உற்சவங்கள்
இத்திருக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் மிகப் பிரசித்தி பெற்றது திருவெம்பாவை உற்சவமாகும். நடராஜர் இரதாரோகணமும் ஆர்த்திராபிஷேகமும் குறிப்பிடத்தக்கவை. அபிஷேகத்தன்று மாலையில் திருவூடல் நடைபெறும். பங்குனி உத்தரத்தில் நிறைவடையும் படி சிவபெருமான் திருவிழா பத்துத் தினங்களும் ஆடிப்பூரத்தில் நிறைவடையும் படி அம்பாள் திருவிழா பத்துத் தினங்களும் நடைபெறுகின்றன. தைப்பூசம், மாசி மகம், ஆவணி சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகைத் தீபம் என்பனவும் விசேடமாக இங்கு போற்றப்படுகின்றன.
[தொகு] ஈழத்துச் சிதம்பரம் மீதான பிரபந்தங்கள்
- ஈழத்துச் சிதம்பர புராணம் - பண்டிதர் நவாலியூர் சோ. இளமுருகனார் பாடியது
- திண்ணபுர வந்தாதி - காரைநகர் மு. கார்த்திகேய ஐயர் பாடியது
- சுந்தரேசர் திருப்பதிகமும் திருவூஞ்சலும் - காரைநகர் த. நாகமுத்துப்புலவர் பாடியது
- திண்ணபுர வெண்பா - காரைநகர் ச. பஞ்சாக்ஷரக்குருக்கள் பாடியது.