நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா, கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரின் வரலாற்று முக்கியத்துவப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பசிலிக்கா ஆகும்.
இதன் கட்டிடம், கவனத்தை ஈர்க்கும் உலகின் சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்று எனலாம். இதன் உள் பகுதி பல நிறங்களைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. இதன் விதானம் (ceiling), கருநீல நிறம் பூசப்பட்டுப் பொன் நிற நட்சத்திர வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்காணக்கான நுண்ணிய மரச் செதுக்கு வேலைகளினாலும், சமயம் சார்ந்த பல சிலைகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறச் சுவரில் அமைந்துள்ள நிறக் கண்ணாடி வேலைப்பாடுகள், வழமையான தேவாலயங்களில் உள்ளதைப் போல பைபிள் சம்பந்தமான காட்சிகளைச் சித்தரிக்காமல் மொன்றியலின் சமயம் சார்ந்த வரலாற்றுக் காட்சிகளைச் சித்தரிக்கின்றன.
[தொகு] வரலாறு
1657 ஆம் ஆண்டில், ரோமன் கத்தோலிக்க Sulpician Order ஐச் சேர்ந்தவர்கள், இன்று மொன்றியல் என அழைக்கப்படும், வில்லே-மேரியை (Ville-Marie) வந்தடைந்தார்கள். தீவின் கட்டுப்பாடு இவர்களுக்கு வழங்கப்படவே, இவர்கள் இதனை 1840 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தனர். இங்கு அவர்கள் உருவாக்கிய பங்கு (parish) மேரியின் புனித பெயரால் அர்ப்பணம் செய்யப்பட்டதுடன், இப் பங்குத் தேவாலயமான நொட்ரே-டேம் 1672 இல் அங்கே நிறுவப்பட்டது.
1824 இல், இத் தேவாலயத்துக்கு வருவோர் தொகை அது கொள்ளக்கூடிய அளவுக்கு மேலாக வளர்ந்ததனால், நியூயார்க்கைச் சேர்ந்த ஐரிஷ்-அமெரிக்க புரட்டஸ்தாந்தவரான ஜேம்ஸ் ஓ'டொன்னெல் (James O'Donnell) என்பவரிடம், புதிய தேவாலயமொன்றை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. கோதிக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை இயக்கத்தின் ஆதரவாளரான ஓ'டொன்னெல், அப் பாணியிலேயே அத் தேவாலயத்தை வடிவமைத்தார். இந்தத் தேவாலயத்தின் நிலவறையில் புதைக்கப்பட்டவர் இவர் மட்டுமே. இதற்காகவே மரணப்படுக்கையில் இவர் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. கட்டி முடிக்கப்பட்ட காலத்தில், வட அமெரிக்காவின் மிகப் பெரிய தேவாலயமாக இது விளங்கியது.