சடங்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சடங்கு என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பு ஆகும். பொதுவாகக் குறியீட்டுத் த்ன்மைகளைக் கொண்டதான இச் செயல்பாடுகள், மனிதரின் அல்லது சமூகத்தின் பயன் கருதிச் செய்யப்படுகின்றன.
சடங்குகள், ஒழுங்கான கால இடைவெளிகளிலோ, குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலோ அல்லது அவரவர் விருப்பப்படியோ நடைபெறலாம். சடங்குகள் தனி மனிதர்களால், குழுக்களால் அல்லது முழுச் சமுதாயத்தாலுமே நிகழ்த்தப்படலாம். இதற்கெனக் குறித்து ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமன்றி எந்த இடத்திலும் நடத்தப்படக்கூடிய சடங்குகளும் உண்டு. சில சடங்குகள் பொதுவாக நடத்தப்படுகின்றன. வேறுசில தனிப்பட்ட சடங்குகளாகும். இன்னும் சில குறிப்பிட்ட ஒரு குழுவினர் மட்டும் பங்குபற்றும் சடங்குகளாக உள்ளன.
சடங்குகளில் நோக்கங்கள் பல்வேறுபட்டவையாக உள்ளன. சில சடங்குகள் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நிகழ்த்தப்படுகின்றன. சில, சடங்கு செய்பவரின் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான திருப்திக்காகச் செய்யப்படுவன. சமூகப் பிணைப்புக்களை வலுப்படுத்தல், மரியாதையை வெளிப்படுத்தல் அல்லது அடிபணிதல், பொதுவான அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான சமூக அங்கீகாரம் பெறுதல், அல்லது வெறுமனே சடங்குகள் செய்வதில் உள்ள இன்பத்துக்காகக் கூடச் சடங்குகள் இடம்பெறுவது உண்டு.
உலகின் பல்வேறு சமூகத்தவரிடையே பல்வேறு விதமான சடங்குகள் நடைபெற்று வருவதைக் காணலாம். சமயங்களினால் வழிபாட்டுத் தேவைகளுக்காக விதிக்கப்படுகின்ற சடங்குகள் ஒருபுறம் இருக்க ஏராளமான சமயம் சார்ந்தனவும் சாராதனவுமான சடங்குகள் உள்ளன. மனிதரின் வாழ்வோடு சம்பந்தமான பல சடங்குகள் உள்ளன. பிறப்பு, பெயர் சூட்டுதல், காது குத்துதல், பூப்படைதல், திருமணம், வளைகாப்பு, அறுபதாம் கல்யாணம், இறப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய சடங்குகள் தமிழ் மக்களுடைய வாழ்வியலோடு தொடர்புள்ளவை. இவற்றைவிட வீடு கட்டுதல், வண்டிகள் வாங்குதல், தொழில் தொடங்குதல் என்பவை தொடர்பிலும் பல சடங்குகள் நடை பெறுகின்றன.
மேற்காட்டிய பழைய மரபு சார்ந்த சடங்குகள் தவிரப் பல்வேறு தற்கால நடவடிக்கைகளோடு ஒட்டிய நிகழ்வுகளிலும் சடங்குத் தன்மை பொருந்திய அம்சங்கள் காணப்படுகின்றன. நாடாளுமன்றக் கூட்டங்கள், புதிய அரசுகள் பொறுப்பெடுத்தல், அறிவியல் மகாநாடுகள், நீதிமன்ற விசாரணைகள், குற்றவாளிகளைத் தூக்கில் இடுதல் என்பவற்றில் கூட இவ்வாறான சடங்குத் தன்மைகளைக் காணமுடியும். கைகுலுக்குதல், கண்டதும் வாழ்த்துக் கூறுதல் என்பனவும் சடங்குத் தன்மை கொண்டனவே.
இவ்வாறு சடங்குகள் மனிதரின் வாழ்வில் பலவாறாகப் பரந்து கிடப்பினும், இவை எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு அம்சம் உண்டு. அதாவது, இச் சடங்குகளின் குறியீட்டுத் தன்மையானது அச் சடங்கை நிகழ்த்துபவரால் தன்னிச்சையாகத் தெரிந்தெடுக்கப் படுவது அல்ல. இது சமயம், அரசு, நிறுவனங்கள் போன்ற வெளிச் சக்திகளினால் விதிக்கப்படுகின்றன அல்லது மரபுவழியாகப் பெறப்படுகின்றன.