இராஜாதிராஜ சோழன் II
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரண்டாம் இராஜாதிராஜ சோழன், விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனாவான். இரண்டாம் இராஜாதிராஜன் பட்டத்திற்கு வரவேண்டும் என்று இரண்டாம் இராஜராஜன் தன்னுடைய ஆட்சியின் இறுதியில் முடிவு செய்தான். நேரடியாக ஆடவர் வரிசையில் அரசுரிமைக்கு உரியோர் இல்லாத காரணத்தால் விக்கிரம சோழனின் மகள் வழிப் பேரனான இரண்டாம் இராஜாதிராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
[தொகு] ஆட்சி
இரண்டாம் இராஜராஜனுடன் சேர்ந்து, இராஜாதிராஜன் இவ்வாறு சில வருடங்கள் அரசப் பிரதிநிதியாக ஆண்டுவந்தான். இராஜாதிராஜனுடைய மெய்க்கீர்த்திகள், மூவகையின. அவை யாவும் சொல்லலங்காரம் நிறைந்ததாக உள்ளனவே தவிர வரலாற்றுச் செய்திகளைச் சிறிதளவும் கொண்டவனவாக இல்லை. இரண்டாம் ஆட்சிக் காலத்திலேயே கணப்படுவதும் 'கடல் சூழ்ந்த பார் மகளும்(மாதரும்)' என்று தொடங்குவதுமான வாசகம், இரண்டாம் இராஜராஜன் கல்வெட்டுகளில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்க வேண்டும். வேறு வாசகங்களும் உண்டு.
ஐந்தாம் ஆண்டில் முதல் முறையாக 'பூமருவியக் திசைமுகத்தோன்' என்ற வாசகம் காணப்படுகிறது. இதைப் பிற்காலத்தில் மூன்றாம் குலோத்துங்கன் கடைபிடித்தான். தஞ்சை மாவட்டத்தின் ஆறாம், பத்தாம் ஆட்சி ஆண்டுகளில் ஏற்பட்ட கல்வெட்டுகளில் 'கடல் சூழ்ந்த பாரேழும்' என்ற வாசகம் உள்ளது. அரசனின் மெய்க்கீர்த்திகள் வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படாவிட்டாலும் அவனுடைய ஆட்சியில் ஏற்பட்ட சில கல்வெட்டுகள், பாண்டிய அரசுரிமைப் போர்களின் நிகழ்ச்சிகளைப் பற்றி விரிவான தகவல்களைத் தருகின்றன. இந்தப் போரைப் பற்றி மகாவம்சம் தெரிவிக்கும் விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கல்வெட்டுச் செய்திகள் மிகவும் நம்பத்தக்கனவாக உள்ளன.
[தொகு] பேரரசின் பரப்பு
இரண்டாம் இராஜராஜனுடைய ஆட்சியில் எவ்வளவுக்குப் பரந்து விரிந்திருந்ததோ அதே அளவில் சோழப் பேரரசு இராஜாதிராஜன் ஆட்சியிலும் பரந்திருந்தது என்பது, நெல்லூர், திருக்காளத்தி, நந்தலூர் ஆகிய இடங்களிலுள்ள கல்வெட்டுகளால் தெரிகிறது. காஞ்சிபுரம் கல்வெட்டு ஒன்றில் 'சோழ மகாராஜ புஜபல வீர அஹோமல்லராசன்' என்பவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான். இவன் இராஜாதிராஜனுக்கு கப்பம் கட்டிய சிற்றரசனாக இருக்கும் பட்சத்தில் கங்க நாட்டின் ஒரு பகுதியும் இன்னும் சோழப் பேரரசில் அடங்கியிருக்க வேண்டும் எனக் கருதமுடிகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஆத்தூரில் உள்ள ஒரு கல்வெட்டு, மதுரையையும் ஈழத்தையும் வென்ற, திருபுவனச் சக்கரவர்த்தி கரிகாலச் சோழ தேவன் பெயரால் குறிப்பிடப்படுகிறது. கரிகாலன் என்பது இரண்டாம் இராஜாதிராஜனின் பட்டங்களுள் ஒன்று என்று அனுமானிப்பது பொருத்தமாகும்.