வைரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வைரம் (Diamond) என்பது படிக நிலையில் உள்ள கரிமம். பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்க சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகும். இவ்வுறுதியின் அடிப்படியிலேயே வைரத்திற்கு தமிழ்ப் பெயரும் அமைந்துள்ளது. வயிரம் என்பதில் இருந்து வைரம் என்னும் சொல் உண்டானது. இதன் மிகுகடினத்தன்மை காரணமாக தொழிலகங்களில் அறுத்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. கண்ணாடி போன்ற பொருள்களை வேண்டிய அளவு வெட்ட வைரம் பதித்த கீறும் கருவி பரவலாகப் பயன்படுகின்றது. அறிவியல் அறிஞர்கள் பல்வேறு முறைகளில் செயற்கையாகவும் வைரம் செய்து காட்டியுள்ளனர். இவைகள்தாம் பெரும்பாலும் தொழிலகக் கருவிகளில் பயன்படுகின்றன. ஆபிரிக்கக் கண்டத்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலேயே வைரம் பெருமளவிற் காணப்படுகிறது. கனடா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 130 மில்லியன் காரட் (26,000 கிலோ கிராம்) வைரம் அகழந்தெடுக்கப்படுகிறது.