பாரசீக வளைகுடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாரசீக வளைகுடா, தென்மேற்கு ஆசியப் பகுதியில் இந்தியப் பெருங்கடலின் நீட்சியாக ஈரானுக்கும் அரேபியக் குடாநாட்டுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு வளைகுடா ஆகும். இது ஓமான் வளைகுடாவின் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் (பாரசீகம்) அராபியத் தீவக்குறைக்கும் இடையே அமைந்துள்ளது.
பாரசீக வளைகுடாவின் இயற்கைச் சூழல், மிகவும் வளம் பொருந்தியது. சிறந்த மீன்பிடிப் பகுதிகள், விரிந்து பரந்த பவளப் பாறைகள், பெருமளவு முத்துச்சிப்பிகள் என்பவற்றைக் கொண்டு விளங்கும் இது, அளவுக்கதிகமான தொழில்மயமாக்கம் மற்றும் அண்மைக்காலத்தில் இப்பகுதியில் நிகழ்ந்த போர்களினால் ஏற்பட்ட எண்ணைக் கசிவுகளினாலும் பெரும் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஈராக் ஈரான் போர், பாரசீக வளைகுடாப் போர் போன்ற போர்க் காலங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இக்குடாக்கடல் இருந்தது.
[தொகு] புவியியல்
ஏறத்தாள 233,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந் நீர்ப்பரப்பு, இதன் கிழக்குப் பகுதியில் ஹொர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக ஓமான் வளைகுடாவுடன் தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மேற்குப் பகுதியில், டைகிரிஸ், இயூபிரட்டீஸ் ஆகிய ஆறுகளின் கழிமுகம் உள்ளது. முக்கியமாக ஈரானையும், சவூதி அரேபியாவையும் பிரிக்கும் இதன் நீளம் 989 கிலோமீட்டர். மிகக் குறுகிய பகுதியான ஹொர்மூஸ் நீரிணைப் பகுதியில் இதன் அகலம் 56 கிலோமீட்டர் ஆக உள்ளது. பொதுவாக இவ்வளைகுடா ஆழம் குறைந்தது. ஆதி கூடிய அளவாக 50 மீட்டர் ஆழத்தைக் கொண்டுள்ளது.