திருவாசகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரத்தை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] நமசிவாய
திருவாசகத்தின் முதல் வரி நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை விளக்குகிறது.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
"நமசிவாய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம். சிவம் என்றால் மங்களம் என்று பொருள். யசுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம். அதன் நடுநாயகமே "நமசிவாய". தீக்கை பெற்றிருந்தாலும், பெறாவிடினும் "நமசிவாய" எனத் தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப்போல், சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார்.
பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின் தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்[1]
மெய்யியல் விளக்கம்
"நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமுந் தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து நாதப் பிரமஞ் சிவநட மாகுமே." (திருமந்திரம்)
"நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத் துவமும் அவற்றொடு நேதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் றானன்றே." (திருமந்திரம்)
நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும். "நமசிவாய" என்னும் மூலமந்திரத்தை ஓதவேண்டும். மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே (உள்ளுக்கு உள்ளே) ஓதுதல்தான் உன்னத காரண நிலை.
நாதத்தின் தலைவன் நாதன். அப்படிப்பட்ட நாதனின் தாள் வாழ்க. இது பக்தி மார்க்கத்தில் உள்ளவருக்கு.
இதன் ஞான நிலை:
"நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய் சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய் யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!" (சிவவாக்கியர்)
இத்துடன் இணைத்திருக்கும் படம் காண்க. [1]. இங்கு தாள் என்பது சிவனின் திருவடி(மலர்ப்பாதம்). நம் உடலில் மலர் போன்ற பகுதி நம் கண்களே. அதுவே இறையின் மலர்ப்பாதங்கள். இவைகளைப் (சூரியகலை, சந்திரகலை) பயன்படுத்தி, அக்கினி கலையுடன் கூட "நமசிவய" எனும் மந்திரம் நம்முடலினுள்ளே கேட்கும்.
[தொகு] குறிப்புகள்
- ↑ உசாத்துணை - சுவாமி சித்பவானந்தர்
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] மின் நூல்
- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருவாசகத் தொகுப்பு-1 (ஒருங்கு குறி வடிவு)
- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருவாசகத் தொகுப்பு-2 (ஒருங்கு குறி வடிவு)
- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருவாசகத் தொகுப்பு (அச்சிட உகந்த வடிவு)
[தொகு] உரை
- திருவாசக உரை தரும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலக வலை தளம்
- திருவாசக உரை தரும் விக்கி நூல்கள் வலை தளம்