தமிழ் வட்டார மொழி வழக்குகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது.
பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்,தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாஷையின் எச்சம் காணப்படுகிறது. வைணவ பரிபாஷை என்பது ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உருவான வைணவ சமய மரபுகள் மற்றும் பண்புகளை உள்ளடக்கிய மொழி வழக்காகும்.
தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியை சில சமயங்களில் கணிக்க முடிகிறது.
எத்னொலோக் (Ethnologue) என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.
புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளை கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீன துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.
[தொகு] தொல்காப்பியத்தில் தமிழ் வட்டார மொழி பற்றிய குறிப்புகள்
- "தொல்காப்பியச் சான்றுகளிலிருந்து இந்நூலசிரியர் 13 தெளிவான பிரதேச மொழிகளை ஒப்புக்கொள்வதாக கருத இடமிருக்கின்றது. இவற்றுள் ஒன்றை அவர் செந்தமிழ் என்று குறிப்பிடுகின்றார். மற்ற 12-ஐக் குறித்து அவர் பொதுவாக "செந்தமிழ் நிலத்தை ஒட்டியிருக்கும் 12 நிலங்களின்" பேச்சு வகைகள் என்று பேசுகின்றார்." [1]
- தொல்காப்பியத்தில் செந்தமிழ் நிலத்தில் பேசப்பட்ட சொற்களை இயற்சொற்கள் என்றும் 12 மற்ற தமிழ் நிலங்களில் பேசப்படும் சொற்களை திசைச் சொல் என்றும் குறிப்பிடுகின்றார்[2].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ கமில் ஸ்வெலபில் ஜனவரி 1962 எழுதிய தமிழின் வட்டார மொழிகள் என்ற கட்டுரையிருலிருந்து: நூல்: வ. விஜயபாஸ்கரன் தொகுத்தது. (2001). சரஸ்வதி களஞ்சியம். சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 219.
- ↑ கமில் ஸ்வெலபில் ஜனவரி 1962 எழுதிய தமிழின் வட்டார மொழிகள் என்ற கட்டுரையிருலிருந்து: நூல்: வ. விஜயபாஸ்கரன் தொகுத்தது. (2001). சரஸ்வதி களஞ்சியம். சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 219.