குலோத்துங்க சோழன் I
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர். இவன் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டான்.
இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.
கி.பி 1115 ஆம் ஆண்டை அண்டி அவனது முதுமைக் காலத்தில், விட்டுணுவர்த்தன் என்பான் வடக்கிலிருந்து படையெடுத்து வந்து சோழ நாட்டில்பெரும் அழிவுகளை உண்டாக்கினான்.
இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.