குலசேகர ஆழ்வார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குலசேகர ஆழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.
குலசேகராழ்வார் சேர அரச மரபைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் சந்திர குலத்து அரசரான திடவிரதர் என்பவராவார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார்.
பின்னர் திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம், திருவரங்கம் முதலான திருத்தலங்களைப் பாடியுள்ளார்.
கொங்கர் கோமான் குலசேகரன் என்ற அடியின்மூலம், இவர் சங்க காலச் சேரர்கள் (கரூர்) மரபினர் என்று தெரிகிறது. தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் சேவித்துள்ளார்.
[தொகு] வெளியிணைப்பு
- குலசேகர ஆழ்வார் (ஆங்கிலத்தில்)