எல்லாளன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எல்லாளன் 205 கி.மு இருந்து 161 கி.மு வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது.
மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ இளவரசனாவான். இதற்கான ஆதாரங்கள் தமிழ் நாட்டு வரலாற்றில் கிடைக்கப் பெறாததால், எல்லாளன் உத்தர தேசம் என அழைக்கப்பட்ட இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த ஒருவனாக இருக்கக்கூடுமெனச் சிலர் கூறுகிறார்கள். கி.மு 205 ஆம் ஆண்டளவில் அனுராதபுரத்தைக் கைப்பற்றிய எல்லாளன் 44 ஆண்டுகள் சிறப்பானதும் நீதியானதுமான ஆட்சியை வழங்கினான். இலங்கையில் தென்பகுதியான உருகுணை உட்பட்ட முழு நாடுமே எல்லாளனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. எல்லாளன் இரு இந்துவாக இருந்தபோதிலும், பெரும்பான்மைச் சமயமாக இருந்த பௌத்த சமயத்துக்கு மிகுந்த மதிப்பு வழங்கினான் என்பது மகாவம்சம் எடுத்துக் கூறும் விடயங்களினூடாகவே அறிய முடிகிறது. வேறெந்த வகையிலும் எல்லாளன்மீது குற்றம் காண முடியாத மகாவம்சம், அவன் இந்துவாக இருந்ததால் அவன் நல்லாட்சியைக் கொடுக்க முடியாது என்ற கருத்தையும் வலியுறுத்த முயல்கிறது.
எல்லாளன் வயது முதிர்ந்த பருவத்தில் இருந்தபோது, சிங்கள இளவரசனான துட்ட காமினி, எல்லாளனுடன் தனியாகப் போர் புரிந்து அவனைத் தோற்கடித்தான்.
இந்த மன்னனைப் பற்றி இலங்கைக் கல்வி வரலாற்றுப் பாடநூல்களில் விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன.