ஈ. வெ. ராமசாமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாகக் கருதிய ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார்.
இவருடைய விழுமியங்களும், கொள்கைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் (சுயமரியாதை இயக்கம், நாத்திகம்) , அரசியல் பரப்பிலும் (திராவிடர் கழகம்) ஆழ்ந்த சலனங்களும், தாக்கங்களும் ஏற்படுத்தியவை.
இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கை
மிக இளம் வயதிலேயே பாடசாலைக் கல்விக்கு முழுக்குப்போட்டுவிட்டுத் தந்தையாரின் வணிக முயற்சிக்குத் துணையாக இருந்தார். எனினும் சமூக ஈடுபாடு இவரைத் தீவிர அரசியலுக்குத் தூண்டியது. தனது நாற்பதாவது வயதில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தனது மனைவியுடன் சிறை சென்றார். காந்தியடிகளின் கொள்கையை ஏற்றுக்கொண்டு அந்த இயக்கத்தின் பல்வேறுபணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பின்னர் கொள்கை அடிப்படையில் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அரசியலிலிருந்து ஒதுங்கிய ஈ.வே.ரா அவர்கள், தன்மான இயக்கத்தில் அக்கறை காட்டத்தொடங்கினார். திராவிடத் தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், இதே கருத்துடைய வேறு பலருடன் சேர்ந்து தனது கொள்கைகளை வற்புறுத்தி வந்தார். அக்காலத்தில் பரவலாக திகழ்ந்த வடமொழி ஆதிக்கம், பிராமண ஆதிக்கம் போன்றவற்றுக்கு எதிராகப் போராடிவந்தார். 1939 இல் இவர் சார்ந்திருந்த இயக்கத்தினூடாகத் தனி் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். 1944 இல் இவருடைய இயக்கம் திராவிடக் கழகம் எனப்பெயர் பெற்றது. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், பெரியாரின் சில செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த சிலர், சி. என். அண்ணாதுரை தலைமையில் திராவிடக் கழகத்திலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினர். பெரியாருடன் கருத்து வேறுபாடு இருந்தபோதும், தி.மு. கழகத்தினர், அவருடைய கொள்கைகளையே பின்பற்றிவந்தனர். 1967 ல் தி.மு.க வினர் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தபோது பெரியார் அவர்களுக்கு ஆதரவு வழங்கினார்.
பெரியார் வளர்த்தெடுத்த உணர்வுகள் தமிழ் நாட்டில் ஆழமாக வேரூன்றியமை காரணமாக 1967 க்குப் பின் தமிழ் நாட்டையாண்ட எல்லா அரசாங்கங்களும், இவருடைய திராவிட இயக்கக் கூடாரத்தைச் சேர்ந்தவையாகவே இருந்தன.
[தொகு] வாழ்க்கை வரலாறு
- 1879 : செப்டெம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
- 1885 : திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
- 1891: பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
- 1892 : வாணிபத்தில் ஈடுபட்டார்
- 1898 : நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
- 1902 : கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
- 1904 : ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
- 1907 : பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
- 1909 : எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
- 1911 : தந்தையார் மறைவு
- 1917 : ஈரோடு நகரமன்றத்தின் தலைவரானார்.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புக்கள்
- பெரியார்.அமை
- கீற்று இணையத்தளத் தகவல்
- பெரியார் குறித்த சிஃபி சிறப்புத் தளம்
- பெரியார் - வலைப்பதிவு
- ஈ.வே.ரா.வின் சொல்லும் செயலும் - ஒரு மீள்பார்வை
- அவர்தாம் பெரியார் - ஞாநி எழுதிய கட்டுரை