மீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மீன் நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு ஆகும். மீன்களை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என வரையறை செய்யலாம். மிகப்பெரும்பாலாவை உடலில் செதிள் கொண்டவை. மீன்களின் உடல் வெப்பநிலையானது தான் வாழும் சூழ்நிலையின் வெப்பத்தைப் பொறுத்து இருக்கும். தனக்கென தனி வெப்பநிலை கொண்டிரா. எனவே மீன்களை சூழ்வெப்பநிலை விலங்குகள் என்று சொல்வர். இவை நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு தன் இனம் பெருக்கி வாழும் உயிரினம். பல் வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. சுமார் 22,000 வகை மீன் இனங்கள் உலகில் உள்ளன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபடுவன. சில தட்டையாகவும் சில உருண்டையாகவும், சில முள்ளுடம்புடனும், சில புழு போலவும் இருக்கும். பிலிப்பைன் நாட்டில் உள்ள நீர்நிலைகளில் வாழும் குட்டிக் கோபி என்னும் சிறு மீன் வகை சுமார் 13 மில்லி மீட்டர் நீளம் தான் கொண்டிருக்கும், ஆனால் திமிங்கிலச்சுறாமீன் என்னும் மீன் சுமார் 18 மீட்டர் (60 அடி) நீளம் கொண்டிருக்கும். திமிங்கிலச்சுறா மீன் சுமார் 14 மெட்ரிக் டன் எடை கொண்டிருக்கும் (அதாவது இரண்டு யானையின் எடை இருக்கும்). சில மீன்கள் கண்ணைக் கவரும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களிலும் சில பல நிறக் கோலங்களும், கோடுகளும் தீட்டுகளும் கொண்டவையாகவும் இருக்கும். சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில வகைகள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்பவை. சில வெப்ப மண்டல நாடுகளின் நீர்நிலைகளிலும், சில மீன் இனங்கள் கடுங்குளிர்ப்பகுதியான ஆர்ட்டிக பெருங்கடல் போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றன.
மீன்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மீன்களிலே பொதுவாக நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன:
- வலுவான எலும்புகள் கொண்ட மீன்வகைகள் (சுமார் 20,000 வகைகள்),
- குருத்தெலும்பு கொண்ட எளிய வகை மீன்கள்.(சுமார் 50 வகைகள்) ,
- குருத்தெலும்பு கொண்ட சுறாமீன்கள், மற்றும் திருக்கை மீன்கள் முதலியன (சுமார் 600 வகைகள்)
- செதிள் இல்லா குருத்தெலும்பு உள்ள எளிய மீன் வகைகள் (விலாங்கு, ஆரல் முதலானவை; சுமார் 50 வகைகள்)
மீன்கள் உலகில் வாழும் மில்லியன் கணக்கான மாந்தர்களுக்கும், கரடி முதலான விலங்குகளுக்கும் உணவாகப் பயன் படுவன.